
நினைவிலிருந்து நீங்கவேயில்லை
அக்ரஹார திண்ணை...
ஆண்டு விடுமுறைக்கு வருகையில்
இந்த வருடமாவது
திண்ணையை தாண்ட முடியுமா...
ஓடித் தாண்டாமல்
நின்று தாண்ட முடியுமா என்ற
அச்சத்தையும் ஆவலையும்
ரயிலிலிருந்து இறங்கி வீட்டுக்கு
நடந்து செல்லும் பொழுதே
கிளப்பிவிடும்...
கிளப்பிவிடும்...
கம்பம் பிடித்தல் விளையாட்டு..
விட்டுக்குடுத்தல் அறியாத வயதில்
திண்ணை கம்பத்தை
வெற்றிக்காக வெறித்தனமாக ஓடி
கெட்டியாக பிடித்துக்கொண்டதும்...
உயிர் குடுத்தாடும் ஆட்டத்தில்
உயிரை குடுத்து ஓடிய ஓட்டமும்
திண்ணை அறியும்...
எதிர் பள்ளிக்கூடத்து சிறுவர்கள்
இடைவேளையில் அசுத்தம் செய்யாமல்
இருக்க கம்புடன் திண்ணையில்
அமர்ந்து காவல் காத்ததும்...
ஆடு புலி ஆட்டமும்,
பகடைக்காயும், பல்லாங்குழியும்,
சோழியும் , சீட்டாட்டமுமென
திண்ணை எப்பொழுதும்
நிரம்பி இருக்கும்...
கலா கனகா உஷா
அணு கீதா ஸ்ரீமதி
விஜய் கணேஷ்
வெறும் பெயர்கள் அல்ல
திண்ணையால் சேர்ந்த
இளமைக்கால
உன்னத நட்பின் அனுபவங்கள்...
தெருவே கூடி வேடிக்கைபார்க்கும்
தீபாவளி சங்கு சக்கரம்
திண்ணையிலிருந்து விழாமல்
தடுக்க ஆளுக்கு ஒரு
பெரிய கைத்தடி...
தாத்தாவுடன்
பல மாலை பொழுதுகளில்
திண்ணையில் அமர்ந்து
அவருக்கு வணக்கம் சொல்வோரை
எண்ணிக்கொண்டிருப்போம்...
பாட்டி சொல்லிக்குடுத்த
பாடத்திற்கு ஊதியமாக
திண்ணையை சுத்தம் செய்துவிட்டு
செல்லும் சிறுமிகள்...
மனைவி பையித்தியமானதிலிருந்து
எதிர் வீட்டு ரகுராமன்
திண்ணையில் தான்
இரவுகளை கழிப்பார்...
இப்படி எல்லார் வாழ்க்கையிலும்
வந்து சென்ற திண்ணை
ஏனோ
தெருவில் ஒரு
அழுக்கு மூட்டையுடன் அமர்ந்திருந்த
அம்மிணி பிச்சைக்காரிக்கு மட்டும்
எட்டாமலே இருந்துவிட்டது.
2 கருத்துகள்:
Arumai. Nostalgic. Thinnai touched so many lives
Arumai. Nostalgic. Thinnai touched so many lives
கருத்துரையிடுக