வியாழன், 1 டிசம்பர், 2016

பயமும் சுதந்திரமும்





குளிர் காற்றுக்கு பயந்து 
ஜன்னலை மூடச்சென்றேன் ...

ஏனோ,
பறந்துகொண்டிருந்த பட்டம் 
சிறு நெருடலை 
ஏற்படுத்தியது.

சனி, 10 செப்டம்பர், 2016

கரைந்த கண்ணோட்டம்


Image result for மண் சிலை விநாயகர்


நேற்று கடவுள் 
கரைந்ததால்
இன்று மண் ஆனது...

இன்று மண் ...
'நான்' கரைந்ததால்
 அதுவே கடவுளுமாய் ஆனது...



ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

இல்லற தாம்பத்யம்


Image result for family

நான் மகன் நீ ...
இன்று
நான் நீ மகன்  சரியா 
என்றேன்...
புரியலை என்றாள்
அன்றும்
இரவு கழிந்தது
நான் மகன் அவளென்று


சனி, 3 செப்டம்பர், 2016

திண்ணை




நினைவிலிருந்து நீங்கவேயில்லை  
அக்ரஹார திண்ணை...

ஆண்டு விடுமுறைக்கு வருகையில்
இந்த வருடமாவது 
திண்ணையை தாண்ட முடியுமா...
ஓடித் தாண்டாமல் 
நின்று தாண்ட முடியுமா என்ற 
அச்சத்தையும் ஆவலையும்
ரயிலிலிருந்து இறங்கி வீட்டுக்கு 
நடந்து செல்லும் பொழுதே 
கிளப்பிவிடும்...

கம்பம் பிடித்தல் விளையாட்டு..
விட்டுக்குடுத்தல் அறியாத வயதில்
திண்ணை கம்பத்தை 
வெற்றிக்காக வெறித்தனமாக ஓடி 
கெட்டியாக பிடித்துக்கொண்டதும்...
உயிர் குடுத்தாடும் ஆட்டத்தில் 
உயிரை குடுத்து ஓடிய ஓட்டமும்
திண்ணை அறியும்...

எதிர் பள்ளிக்கூடத்து சிறுவர்கள் 
இடைவேளையில் அசுத்தம் செய்யாமல் 
இருக்க கம்புடன் திண்ணையில் 
அமர்ந்து காவல் காத்ததும்...

ஆடு புலி ஆட்டமும், 
பகடைக்காயும், பல்லாங்குழியும், 
சோழியும் , சீட்டாட்டமுமென 
திண்ணை எப்பொழுதும் 
நிரம்பி இருக்கும்...

கலா கனகா உஷா 
அணு கீதா ஸ்ரீமதி 
விஜய் கணேஷ் 
வெறும் பெயர்கள் அல்ல
திண்ணையால் சேர்ந்த
 இளமைக்கால 
உன்னத நட்பின் அனுபவங்கள்...

தெருவே கூடி வேடிக்கைபார்க்கும்
தீபாவளி சங்கு சக்கரம் 
திண்ணையிலிருந்து விழாமல் 
தடுக்க ஆளுக்கு ஒரு 
பெரிய கைத்தடி...

தாத்தாவுடன் 
பல மாலை பொழுதுகளில் 
திண்ணையில் அமர்ந்து 
அவருக்கு வணக்கம் சொல்வோரை 
எண்ணிக்கொண்டிருப்போம்...

பாட்டி சொல்லிக்குடுத்த 
பாடத்திற்கு  ஊதியமாக  
திண்ணையை  சுத்தம் செய்துவிட்டு 
செல்லும் சிறுமிகள்...

மனைவி பையித்தியமானதிலிருந்து
எதிர் வீட்டு ரகுராமன் 
திண்ணையில் தான் 
இரவுகளை கழிப்பார்...

இப்படி  எல்லார் வாழ்க்கையிலும் 
வந்து சென்ற திண்ணை
ஏனோ 
தெருவில் ஒரு 
அழுக்கு மூட்டையுடன் அமர்ந்திருந்த
அம்மிணி பிச்சைக்காரிக்கு மட்டும் 
எட்டாமலே இருந்துவிட்டது.




வெள்ளி, 2 செப்டம்பர், 2016

நேரக்கணக்கு

Image result for clock


எப்பொழுதும் தாமதமாகவே 
கிளம்புகிறாள் மகள் என்று 
கடிகாரத்தை ஐந்து நிமிடம் வேகமாக வைத்தேன்.

மணி பார்க்கும் ஒவ்வொரு நேரமும்
ஐந்தை கழித்தே தாமதமாக செல்ல 
ஆரம்பித்தேன் நான்.



துணை

Image result for man gazing at moon

நான் பார்த்தால் 
எனை பார்க்கும், 

நடந்தால் உடன் 
நடக்கும்,

ஓடினால் உடன் 
விரையும், 

நின்றால் காத்திருக்கும்,

உனை விட 
சிறந்த துணை 
வேறில்லை 

வான் நிலவே !



அஹிம்சை

Image result for silk worm

சுதந்திர தினம் - 
பட்டு வேட்டி 
பட்டு சட்டையுடன் 
ஆயத்தமாகிவிட்டார் 
அஹிம்சை சொற்பொழிவு 
ஆற்ற ..

வியாழன், 1 செப்டம்பர், 2016

சிறை

Image result for cage parrot


சுதந்திர கிளி -
நாளை என்னாகுமோ என்று
ஜோசியரை பார்த்து 
சிறைபட்டுக்கொண்டது