புதன், 3 ஜூன், 2020

குடியே பெயர்ந்த குடிபெயர்ந்தவன்...


குடிபெயர்ந்தவன் 
குடியே பெயர்ந்ததென்ன ...

உழுத நிலம் போல் 
பிளந்த கால் கடுக்க 
அழுத கண்ணீரும் 
பகலவன் உரிந்தெடுக்க 
தொழுத தெய்வமும் 
கை விட்டதுவோ ?! 

அருந்தவும் நீரில்லை 
வருந்தவும் ஆளில்லை... 

நடக்கக்கூடாதது 
நாட்டில் நடக்க,
வறண்ட நாவோடு 
சுருண்ட வயிறோடு 
இருண்ட கண்ணோடு 
திரண்ட மக்கள்,
நடக்க முடியாமல்
நடைபிணமாய் நடக்க...

ஐந்தறிவு புள்ளினம் 
சுதந்திரமாய் திரிய 
ஆறறிவு ஜீவன்
ரணத்தோடு 
மரணத்தை 
எதிர்கொண்டு வெறும் 
புள்ளி விவரமாய் மடிய...

மூட்டை சுமத்தவன் 
மூட்டைக்குள் சவமாய்...

இரயில் ஏறி மரணம் 
ஏறிய இரயிலில் மரணம் 
விபத்தில் மரணம் 
பசியில் மரணம்  
பிணியில் மரணம் 
பீதியில் மரணம்
நாதி அற்றவனாய் நடு 
வீதியில் மரணம்...

இங்கு 
மதிப்பிழந்தது வெறும் 
பணம் மட்டுமல்ல 
பிணமும் கூட... 

ஏழ்மை அழியாமல் 
ஏழையே அழிவதா ?!

காரணம்,
கிருமியா... 
பேராசை பிடித்த 
கருமியா ?!

இறந்த மனிதன் 
கேட்கிறான் 
இருக்கிறதா மனிதம் 
என்று... 

பேச்சு சுதந்திரம் இழந்து 
மூச்சு சுகந்திரமும் இழந்து 
முக கவசம் அணிந்து 
வாயடைத்த ஊமையாய் 
வேடிக்கை பார்க்கிறோம்

விடை 
காலனின் கையிலா 
காலத்தின் கையிலா