ஞாயிறு, 20 ஜூன், 2021

தந்தையர் தினம்

 


மறைந்த என் தந்தையின் 

நினைவாகவே இருந்தேன் ...

என் குழந்தைகள் வந்து 

'அப்பா' என்றென்னை 

அழைக்கும் வரை.


புதன், 3 ஜூன், 2020

குடியே பெயர்ந்த குடிபெயர்ந்தவன்...


குடிபெயர்ந்தவன் 
குடியே பெயர்ந்ததென்ன ...

உழுத நிலம் போல் 
பிளந்த கால் கடுக்க 
அழுத கண்ணீரும் 
பகலவன் உரிந்தெடுக்க 
தொழுத தெய்வமும் 
கை விட்டதுவோ ?! 

அருந்தவும் நீரில்லை 
வருந்தவும் ஆளில்லை... 

நடக்கக்கூடாதது 
நாட்டில் நடக்க,
வறண்ட நாவோடு 
சுருண்ட வயிறோடு 
இருண்ட கண்ணோடு 
திரண்ட மக்கள்,
நடக்க முடியாமல்
நடைபிணமாய் நடக்க...

ஐந்தறிவு புள்ளினம் 
சுதந்திரமாய் திரிய 
ஆறறிவு ஜீவன்
ரணத்தோடு 
மரணத்தை 
எதிர்கொண்டு வெறும் 
புள்ளி விவரமாய் மடிய...

மூட்டை சுமத்தவன் 
மூட்டைக்குள் சவமாய்...

இரயில் ஏறி மரணம் 
ஏறிய இரயிலில் மரணம் 
விபத்தில் மரணம் 
பசியில் மரணம்  
பிணியில் மரணம் 
பீதியில் மரணம்
நாதி அற்றவனாய் நடு 
வீதியில் மரணம்...

இங்கு 
மதிப்பிழந்தது வெறும் 
பணம் மட்டுமல்ல 
பிணமும் கூட... 

ஏழ்மை அழியாமல் 
ஏழையே அழிவதா ?!

காரணம்,
கிருமியா... 
பேராசை பிடித்த 
கருமியா ?!

இறந்த மனிதன் 
கேட்கிறான் 
இருக்கிறதா மனிதம் 
என்று... 

பேச்சு சுதந்திரம் இழந்து 
மூச்சு சுகந்திரமும் இழந்து 
முக கவசம் அணிந்து 
வாயடைத்த ஊமையாய் 
வேடிக்கை பார்க்கிறோம்

விடை 
காலனின் கையிலா 
காலத்தின் கையிலா 

ஞாயிறு, 22 மார்ச், 2020

ஜனதா curfew
ஜனதா curfew 
பால்கனிவரை சென்றேன் 
பறவைகள் 
பறந்துகொண்டிருந்தன !

சனி, 9 மார்ச், 2019

மகளிர் தினம்


Image result for woman freedom painting


பெண்!
தினம் எடுத்து
கொண்டாடப்பட வேண்டியவள் அல்ல,
தினம் தினம்
கொண்டாடப்பட வேண்டியவள்!


சனி, 27 ஜனவரி, 2018

என்னவளே, அடி என்னவளே!காமத்திற்கும் காதலிற்கும் 
அப்பால் உள்ள 
இயல்பான ஆனந்தத்தை 
அனுபவிக்கும் காலம் ...

தோலுக்கென காத்திருந்த 
நாட்கள் கடந்து 
உன்
தோளுக்கென 
காத்திருக்கும் நாட்கள்! 

எந்நேரமும் 
சாய்ந்து கொள்ள
உன் தோள்  
இருக்கின்றதென்ற  
உணர்வே ஆனந்தம்!

அன்பாய்,
அனுசரணையாய்,
இயல்பாய் 
நான் நானாகவே 
வாழும் பேறு 
உன்னோடு பெற்றேன்! 

எனக்கென  
நீ இருக்கிறாய் 
என்று நிம்மதியாய், 
சாந்தமாய் 
இறுதி மூச்சு விட்டனர் 
என் தாய் தந்தை... 

நீ 
தாயாக 
குழந்தைகளோடு 
எனக்குமாய் 
இருந்து வருகிறாய்!

மேடு பள்ளம் நிறைந்தது 
தான் வாழ்க்கை 
என்ற புரிதலே 
ஆனந்தம்! 

ஊடலும் 
வாழ்க்கையின் 
ஒரு அங்கம்  
என்ற புரிதலே 
ஆனந்தம்!

சண்டையிட்ட பின் 
சரி செய்ய முயற்சி ஏதும் 
எடுக்காமல் தானாகவே 
சமாதானமாகும் 
உன்னுடனான 
உறவும் ஒரு வரமே!

எனக்கு நீ 
உனக்கு நான் 
என்று 
முற்றிலுமான சார்பு 
வாழ்க்கையாய் இல்லாமலும்...

எனக்கு நான் 
உனக்கு நீ
என்று 
முற்றிலுமான 
தனித்துவம் நிறைந்த 
வாழ்க்கையாய் இல்லாமலும்...

இரண்டிற்கும் இடையே 
ஒரு உன்னத 
உறவு நிலையில் 
சுதந்திரச்சார்பை  
கண்டு களிக்கிறோம்!

திருமணங்கள் 
நிச்சயிக்கப்படும் இடமாய் 
மட்டும் இல்லாமல் 
உன்னோடு வாழும் 
வாழ்க்கையும் 
விருப்பு வெறுப்பிற்கு 
அப்பால் நிற்பதால் 
இதுவும் 
சொர்கமே!

சனி, 2 டிசம்பர், 2017

அன்பே அன்னையாய் !


நீங்கா நினைவிலிருந்து நீங்கி, 
நீங்கியும் நீங்காமலும் நின்று,
நீங்கியே விட்டது நினைவிலிருந்து... 

நினைவலைகளை தட்டியெழுப்பியதும்- 
என்றோ உன் கரம் பிடித்து நடந்ததும், 
உன் முந்தானைக்குள் ஒளிந்துகொண்டதும், 
உன் வெப்பம் என் வலியை கரைத்ததும்,
உன் பாசம் முழுவதுமாய் என்னை அரவணைத்ததும், 
உன் கைகள் என் தலை கோதி அமைதிப்படுத்தியதும், 
உணவோடு சேர்ந்து ஊக்கத்தையும் ஊட்டியதும்,
என்னை சிறு சிறு அடியெடுக்கச்செய்து 
சிறகடித்து பறக்க விட்டதும்
நினைவிலிருந்து எட்டிப்பார்க்கின்றன !

உடலாய் உன்னை நினைத்தால் 
இன்று நீ இல்லை...
உணர்வாய் உன்னை நினைத்தால் 
என்றுமே நீ இல்லாமல் இல்லை !

அளவிலா அன்பாய், ஆனந்தமாய், அமைதியாய் 
ஆழ்மனதில் அரும்பிக்கொண்டேதான் இருக்கிறாய் 
அன்னையே !

வியாழன், 1 டிசம்பர், 2016

பயமும் சுதந்திரமும்

குளிர் காற்றுக்கு பயந்து 
ஜன்னலை மூடச்சென்றேன் ...

ஏனோ,
பறந்துகொண்டிருந்த பட்டம் 
சிறு நெருடலை 
ஏற்படுத்தியது.