காமத்திற்கும் காதலிற்கும் 
அப்பால் உள்ள 
இயல்பான ஆனந்தத்தை 
அனுபவிக்கும் காலம் ...
தோலுக்கென காத்திருந்த 
நாட்கள் கடந்து 
உன்
தோளுக்கென 
காத்திருக்கும் நாட்கள்! 
எந்நேரமும் 
சாய்ந்து கொள்ள
உன் தோள்  
இருக்கின்றதென்ற  
உணர்வே ஆனந்தம்!
அன்பாய்,
அனுசரணையாய்,
இயல்பாய் 
நான் நானாகவே 
வாழும் பேறு 
உன்னோடு பெற்றேன்! 
எனக்கென  
நீ இருக்கிறாய் 
என்று நிம்மதியாய், 
சாந்தமாய் 
இறுதி மூச்சு விட்டனர் 
என் தாய் தந்தை... 
நீ 
தாயாக 
குழந்தைகளோடு 
எனக்குமாய் 
இருந்து வருகிறாய்!
மேடு பள்ளம் நிறைந்தது 
தான் வாழ்க்கை 
என்ற புரிதலே 
ஆனந்தம்! 
ஊடலும் 
வாழ்க்கையின் 
ஒரு அங்கம்  
என்ற புரிதலே 
ஆனந்தம்!
சண்டையிட்ட பின் 
சரி செய்ய முயற்சி ஏதும் 
எடுக்காமல் தானாகவே 
சமாதானமாகும் 
உன்னுடனான 
உறவும் ஒரு வரமே!
எனக்கு நீ 
உனக்கு நான் 
என்று 
முற்றிலுமான சார்பு 
வாழ்க்கையாய் இல்லாமலும்...
எனக்கு நான் 
உனக்கு நீ
என்று 
முற்றிலுமான 
தனித்துவம் நிறைந்த 
வாழ்க்கையாய் இல்லாமலும்...
இரண்டிற்கும் இடையே 
ஒரு உன்னத 
உறவு நிலையில் 
சுதந்திரச்சார்பை  
கண்டு களிக்கிறோம்!
திருமணங்கள் 
நிச்சயிக்கப்படும் இடமாய் 
மட்டும் இல்லாமல் 
உன்னோடு வாழும் 
வாழ்க்கையும் 
விருப்பு வெறுப்பிற்கு 
அப்பால் நிற்பதால் 
இதுவும் 
சொர்கமே!
P.C Ujesha Sivaramakrishnan

 
1 கருத்து:
சபர்பன் பள்ளி, பொறியியல் கல்லூரி எல்லவற்றையும் தாண்டி ஒரு உணர்வுகளின் ஊர்வலமான கவிதைகள்அ,க்கவிதையினுள் உயிரோட்டம், மனதாழந்தல் புதைந்த அன்பும் முதிர்ந்த காதலின் பரிமாணங்கள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் காவியங்கள். சான்றோனைக்காண அன்னையும் இருந்திருந்தால்...?..முற்றுப்பெராத கேள்விகள் கிடைக்காத விடைகள்....
கருத்துரையிடுக