புதன், 14 டிசம்பர், 2011

அன்னைக்கு அஞ்சலி



தன்னை மறந்து என்னை உருவாக்கியவளே !
என்னை சுமந்த உன் பிரசவ வலியை விட
உன் சவம் சுமந்த என் வலி கொடியதம்மா...

உன் உடம்பு சிறியது - அதற்குள் 
பெரிய இதயத்தை பெற்றதால் - இடமில்லாமல் 
உன் சிறுநீரகம் இன்னும் சிறுத்துப்போயிருக்கும்

ஒருவரையும் நீ குத்திக் காட்டியதில்லை - 
ஆனால் உன் கரம் காட்டினாய் 
அதில் ஊசி குத்தாத இடமில்லை 

வந்த விருந்தினரை உபசரிக்க மறந்ததில்லை -
உன் நுரையீரலுக்கு வந்த நுண்யுயிர் கிருமி உட்பட

புற்று நோய் வந்த போதிலும் 
என்றும் போல் 
இன்புற்று இருந்தாய்...

காச நோயையும் தாண்டி வந்த நீ
இந்த சிறு 
சுவாச நோய் தாண்ட இயலவில்லையே ..

உன் உடம்பை 
நீ
பற்றிக்க முடியாமல் 
தீ
பற்றிக்க நேர்ந்ததே ...

எனக்கு 
பாடம் புகட்டிய உனக்கு 
பாடைப் படுக்கையா ?

என் முதல் சுவாசம் நள்ளிரவில் - ஆனால்
பலமுறை நீ சுவாசம் இன்றி தவித்த வேளையிலும் 
என் உறக்கம் கலைக்காமல் தனியே தவித்திருந்தாய்.
உன் உயிர் பிரியும் என்று அறிந்திருந்தால் - உனக்கு 
ஊட்டிய உணவில் என் உயிரை சற்றே கலந்திருப்பேன்...

கிடங்கில் கிடக்கும்  உன் பழைய கடிதத்தை எடுத்துப் படிக்க முடியாமல் - 
எண்ணற்ற
சடங்கில் சிக்கித் தவிக்கிறேன். 

தனியே உன் நினைவில் மட்டும் மூழ்கி 
வெளிவர இன்னும் காத்திருக்குது ...
கண்ணோரம் தேங்கி நிற்கும் கண்ணீர் 

புதன், 10 மார்ச், 2010

ஆயிரம் காரணங்கள் ...



அது
உண்மை சாமியாரின்
போலி முகமா...
அல்லது
போலிச் சாமியாரின்
உண்மை முகமா..

எனக்கு புதிர்னா ரொம்ப
பிடிக்கும்.
யார்ரா அவ
‘R' ரா அவ.
அந்த ‘ர’ வா
இப்படி ராவோடு ராவாக

ஒருவரின்
முகம் மறைக்கப்பட்டு...
ஒருவரின்
முகம் கிழிக்கப்பட்டு...

சிலருக்கு வெறும் செய்தி
சிலருக்கு அது அநீதி
சிலருக்கு பெரும் இடி
சிலருக்கு அது வாணிபம்
சிலருக்கு ஏமாற்றம்
சிலருக்கு மகிழ்ச்சி ...

சிலருக்கு சமூகம்
பாதிக்கப்பட்டுவிடுமோ
என்ற கவலை

பேரின்பமே சிற்றின்பத்திலா
என்ற அதிர்ச்சி சிலருக்கு
 
சிலர் 
கற்பனையிலும் நினைக்கவில்லை
விற்பனைக்கு அவள் என்று

அவரவர் கோணத்தில்
அவரவர் வாதங்கள்

அவரவருக்கான தாக்கங்கள்

எல்லாருக்குமான உணர்வுகள்
சரிதானா?

அந்த பலான வீடியோவை
முழுவதுமாக பார்க்க
இதற்கு மேலும் 
காரணம் தேவையில்லை

நான் ’போலி’ மனிதன்  அல்லவே...

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

ஏழ்மை...



ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன்
ஒரு அரை நிர்வாண பிச்சைக்காரி..

ஓடிச் சென்று மூடினேன்
அரை குறையாக திறந்திருந்த
ஜன்னலின் திரைச்சீலையை

என் நிர்வாணம் அங்கே
வெளிப்பட்டது.

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-


அவள் ஏழ்மையை...
வெண்பாவில் பாட
‘நாள், மலர், காசு, பிறப்பு’
முடிவில் வரும் என அறிந்தேன்

அவள்,
நாள் மலர்ந்ததும், காசுக்கு அலையும் பிறப்பு
இதற்கு முடிவு ?

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

கன்னத்தில் முத்தமிட்டால் ...


உதிர்ந்த இமை முடியை
அகற்றிய நொடியில்
உன் கண்களில் நான் !

முத்தத்திலும்,
‘அப்பா’ என்ற சத்தத்திலும்,
உன் மூச்சிலும், பேச்சிலும் நான் !

என் எழுத்துக்களுக்கிடயே
உன் கிறுக்கல்கள் தந்த
அர்த்தங்களில் நான் !

உன் கேள்வியில் நான் !
உனக்கு கற்பித்து, கற்றதும் நான் !

வாழ்கையில் நீ, என் குழந்தை
விளையாட்டில் நான், உன் குழந்தை

வாழ்கையே ஒரு விளையாட்டெனின்...

என்னிலிருந்தா நீ ?
உன்னிலிருந்து தானே நான்!

வெள்ளி, 29 ஜனவரி, 2010

சொல்லாத காதல் ...


தோற்றுவிடுவோமோ
என்ற அச்சத்தில்
காதலை தெரிவிக்காமலே
தோற்றுவிடுவோமோ ?!
-*-*-*-

நான் வரும் பக்கம்
புத்தகத்தால் முகத்தை மறைத்தாயே
சூரியனுக்காகத்தானே !
-*-*-*-

என்னை ஊமை ஆக்கிவிட்டு
என்னிடமே கேள்வி கேட்கிறாயே
என்ன விளையாட்டடீ இது..
-*-*-*-

பார்த்துவிட்டால் உன் விழி
தின்கிறது
பார்க்காவிட்டால், பார்க்கவில்லயே
என்ற கவலை
தின்கிறது
எப்படியும் நான் தின்னப்படுவது
உறுதி என்றால், அதை
உன் விழியே செய்யட்டுமே !

வியாழன், 28 ஜனவரி, 2010

முரண் ...




இத்தனை சிக்கல்களா மனதிற்குள்...
இரவும் பகலும் மாறி மாறி வருவது போல்

ஒவ்வொரு கணமும் முரண்பட்ட சிந்தனை...
எப்படித்தான் இயங்குகிறேனோ ?!

ஒரு நொடி கருணை, தயவு என்று தலை தூக்கும்
மறு கணமே தண்டனை சரி என்று பறை சாற்றும்

காதலுக்காக காமமா...
காமதிற்காக காதலா...

பணம் நல்லதா...கொடியதா...

பாசம் கலந்த வேஷமா...
வேஷம் கலந்த பாசமா...

மீண்டும் பிறவியா...
என்றும் மோட்ஷமா...

இல்லாமல் இருக்கின்றாரா கடவுள்...
இருந்து இல்லாமல் இருக்கின்றாரா ...

எனக்குள்ளே என்னை நானே
தேடிக்கொண்டிருக்கிறேன்...

இருப்பினும்,
இத்தனை முரண்களுடன்
என்னை,
தன் மூன்றாம் மாதத்திலேயே
கண்டுகொண்டு என் முகம்
பார்த்துச் சிரித்தாளே என் மகள்

என்ன விந்தை !

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

அழைத்துச்செல் ஆண்டவனே ...


அழைத்துச்செல் ஆண்டவனே - என்னை
தூளியில் கட்டி, பாலூட்டி, சீராட்டி
குளிப்பாட்டி வளர்த்துவந்த காலத்திற்கு
அழைத்துச்செல் ஆண்டவனே...

என் மழலையில் நானே மூழ்க
என் பிஞ்சு விரல்களே என் நெஞ்சைத் தீண்ட
தட்டுத் தடுமாறி பலமுறை தடுக்கி விழுந்தும்
விடா முயற்ச்சியில் எழுந்து நடமாடிய என்னைக்
காண அழைத்துச்செல் ஆண்டவனே...

அ - அம்மா, ஆ - ஆடு, இ - இலை என்று
நான் முதன்முதலில் கற்றதும்
ஏன், எப்படி, எதற்கு என்று எதற்கெடுத்தாலும்
கேள்வி கேட்டு வந்த ஆர்வச்சிறுவனைக்
காண அழைத்துச்செல் ஆண்டவனே...

கள்ளமற்ற, சிறு களங்கமற்ற, நற்சிந்தனைகள்
மட்டுமே பெற்ற என்னைக் காண
அழைத்துச்செல் ஆண்டவனே...

அப்படி நீ என்னை அவனிடம் அழைத்துச்சென்றால்
ஒன்றே ஒன்று மட்டும் கேட்பேன்...
இத்தனையும் கற்று வந்த நீ, ஏன்
வாழ்க்கையின் தத்துவம்
இயற்க்கையின் நியதி
காலத்தின் லீலைகள்
பிறப்பின் சூட்சுமம்
இறப்பின் இயல்பு
இவற்றை மட்டும் கற்கவில்லை

முடிந்தால் அவற்றை கற்கச்சொல்லிவிட்டு
மீண்டும் இந்த நிலைக்கு வருவேன்.

அப்போது இந்தப் பக்கம் வெறும்
வெற்றுப்பக்கமாக இருந்திருக்கும்...