புதன், 14 டிசம்பர், 2011

அன்னைக்கு அஞ்சலி



தன்னை மறந்து என்னை உருவாக்கியவளே !
என்னை சுமந்த உன் பிரசவ வலியை விட
உன் சவம் சுமந்த என் வலி கொடியதம்மா...

உன் உடம்பு சிறியது - அதற்குள் 
பெரிய இதயத்தை பெற்றதால் - இடமில்லாமல் 
உன் சிறுநீரகம் இன்னும் சிறுத்துப்போயிருக்கும்

ஒருவரையும் நீ குத்திக் காட்டியதில்லை - 
ஆனால் உன் கரம் காட்டினாய் 
அதில் ஊசி குத்தாத இடமில்லை 

வந்த விருந்தினரை உபசரிக்க மறந்ததில்லை -
உன் நுரையீரலுக்கு வந்த நுண்யுயிர் கிருமி உட்பட

புற்று நோய் வந்த போதிலும் 
என்றும் போல் 
இன்புற்று இருந்தாய்...

காச நோயையும் தாண்டி வந்த நீ
இந்த சிறு 
சுவாச நோய் தாண்ட இயலவில்லையே ..

உன் உடம்பை 
நீ
பற்றிக்க முடியாமல் 
தீ
பற்றிக்க நேர்ந்ததே ...

எனக்கு 
பாடம் புகட்டிய உனக்கு 
பாடைப் படுக்கையா ?

என் முதல் சுவாசம் நள்ளிரவில் - ஆனால்
பலமுறை நீ சுவாசம் இன்றி தவித்த வேளையிலும் 
என் உறக்கம் கலைக்காமல் தனியே தவித்திருந்தாய்.
உன் உயிர் பிரியும் என்று அறிந்திருந்தால் - உனக்கு 
ஊட்டிய உணவில் என் உயிரை சற்றே கலந்திருப்பேன்...

கிடங்கில் கிடக்கும்  உன் பழைய கடிதத்தை எடுத்துப் படிக்க முடியாமல் - 
எண்ணற்ற
சடங்கில் சிக்கித் தவிக்கிறேன். 

தனியே உன் நினைவில் மட்டும் மூழ்கி 
வெளிவர இன்னும் காத்திருக்குது ...
கண்ணோரம் தேங்கி நிற்கும் கண்ணீர்