கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

ஏழ்மை...



ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன்
ஒரு அரை நிர்வாண பிச்சைக்காரி..

ஓடிச் சென்று மூடினேன்
அரை குறையாக திறந்திருந்த
ஜன்னலின் திரைச்சீலையை

என் நிர்வாணம் அங்கே
வெளிப்பட்டது.

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-


அவள் ஏழ்மையை...
வெண்பாவில் பாட
‘நாள், மலர், காசு, பிறப்பு’
முடிவில் வரும் என அறிந்தேன்

அவள்,
நாள் மலர்ந்ததும், காசுக்கு அலையும் பிறப்பு
இதற்கு முடிவு ?

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

கன்னத்தில் முத்தமிட்டால் ...


உதிர்ந்த இமை முடியை
அகற்றிய நொடியில்
உன் கண்களில் நான் !

முத்தத்திலும்,
‘அப்பா’ என்ற சத்தத்திலும்,
உன் மூச்சிலும், பேச்சிலும் நான் !

என் எழுத்துக்களுக்கிடயே
உன் கிறுக்கல்கள் தந்த
அர்த்தங்களில் நான் !

உன் கேள்வியில் நான் !
உனக்கு கற்பித்து, கற்றதும் நான் !

வாழ்கையில் நீ, என் குழந்தை
விளையாட்டில் நான், உன் குழந்தை

வாழ்கையே ஒரு விளையாட்டெனின்...

என்னிலிருந்தா நீ ?
உன்னிலிருந்து தானே நான்!

வெள்ளி, 29 ஜனவரி, 2010

சொல்லாத காதல் ...


தோற்றுவிடுவோமோ
என்ற அச்சத்தில்
காதலை தெரிவிக்காமலே
தோற்றுவிடுவோமோ ?!
-*-*-*-

நான் வரும் பக்கம்
புத்தகத்தால் முகத்தை மறைத்தாயே
சூரியனுக்காகத்தானே !
-*-*-*-

என்னை ஊமை ஆக்கிவிட்டு
என்னிடமே கேள்வி கேட்கிறாயே
என்ன விளையாட்டடீ இது..
-*-*-*-

பார்த்துவிட்டால் உன் விழி
தின்கிறது
பார்க்காவிட்டால், பார்க்கவில்லயே
என்ற கவலை
தின்கிறது
எப்படியும் நான் தின்னப்படுவது
உறுதி என்றால், அதை
உன் விழியே செய்யட்டுமே !

வியாழன், 28 ஜனவரி, 2010

முரண் ...




இத்தனை சிக்கல்களா மனதிற்குள்...
இரவும் பகலும் மாறி மாறி வருவது போல்

ஒவ்வொரு கணமும் முரண்பட்ட சிந்தனை...
எப்படித்தான் இயங்குகிறேனோ ?!

ஒரு நொடி கருணை, தயவு என்று தலை தூக்கும்
மறு கணமே தண்டனை சரி என்று பறை சாற்றும்

காதலுக்காக காமமா...
காமதிற்காக காதலா...

பணம் நல்லதா...கொடியதா...

பாசம் கலந்த வேஷமா...
வேஷம் கலந்த பாசமா...

மீண்டும் பிறவியா...
என்றும் மோட்ஷமா...

இல்லாமல் இருக்கின்றாரா கடவுள்...
இருந்து இல்லாமல் இருக்கின்றாரா ...

எனக்குள்ளே என்னை நானே
தேடிக்கொண்டிருக்கிறேன்...

இருப்பினும்,
இத்தனை முரண்களுடன்
என்னை,
தன் மூன்றாம் மாதத்திலேயே
கண்டுகொண்டு என் முகம்
பார்த்துச் சிரித்தாளே என் மகள்

என்ன விந்தை !

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

அழைத்துச்செல் ஆண்டவனே ...


அழைத்துச்செல் ஆண்டவனே - என்னை
தூளியில் கட்டி, பாலூட்டி, சீராட்டி
குளிப்பாட்டி வளர்த்துவந்த காலத்திற்கு
அழைத்துச்செல் ஆண்டவனே...

என் மழலையில் நானே மூழ்க
என் பிஞ்சு விரல்களே என் நெஞ்சைத் தீண்ட
தட்டுத் தடுமாறி பலமுறை தடுக்கி விழுந்தும்
விடா முயற்ச்சியில் எழுந்து நடமாடிய என்னைக்
காண அழைத்துச்செல் ஆண்டவனே...

அ - அம்மா, ஆ - ஆடு, இ - இலை என்று
நான் முதன்முதலில் கற்றதும்
ஏன், எப்படி, எதற்கு என்று எதற்கெடுத்தாலும்
கேள்வி கேட்டு வந்த ஆர்வச்சிறுவனைக்
காண அழைத்துச்செல் ஆண்டவனே...

கள்ளமற்ற, சிறு களங்கமற்ற, நற்சிந்தனைகள்
மட்டுமே பெற்ற என்னைக் காண
அழைத்துச்செல் ஆண்டவனே...

அப்படி நீ என்னை அவனிடம் அழைத்துச்சென்றால்
ஒன்றே ஒன்று மட்டும் கேட்பேன்...
இத்தனையும் கற்று வந்த நீ, ஏன்
வாழ்க்கையின் தத்துவம்
இயற்க்கையின் நியதி
காலத்தின் லீலைகள்
பிறப்பின் சூட்சுமம்
இறப்பின் இயல்பு
இவற்றை மட்டும் கற்கவில்லை

முடிந்தால் அவற்றை கற்கச்சொல்லிவிட்டு
மீண்டும் இந்த நிலைக்கு வருவேன்.

அப்போது இந்தப் பக்கம் வெறும்
வெற்றுப்பக்கமாக இருந்திருக்கும்...

சனி, 23 ஜனவரி, 2010

காதல் வ(ரி)லிகள் ...




உன்னை பார்க்குமுன் ‘நான்’
பார்த்தபின் ‘நான்’ என்று
என்னை இரண்டாக்கியவளே ...

என் பழைய ‘நானை’ உனக்கென
அழித்து புதிய ‘நான்’ ஆக்கிக்கொண்டேன்...

ஆனால் ‘நீ’ மட்டும் அதே ‘நீ’

இன்று கேலி செய்தனர் என்னை
இருக்கும் ‘நான்’ நானே இல்லை...
வெறும் ‘சூன்யம்’ என்று

நீ நீயாகவே இருந்து என்
பழைய ‘நானை’ பறித்துச்சென்றாயே...

மீண்டும் நான் பழைய நானாக..
சிறிதளவேனும் என்னைத் திருப்பித்தாடி
கல்நெஞ்சி...


வெள்ளி, 15 ஜனவரி, 2010

பிச்சை




குருட்டு பிச்சைக்காரன் உண்மையில் குருடன்தானே
என்று சோதித்து பார்த்த எனது பார்வை...

செவிடு ஊமை பிச்சைக்காரனை சோதிக்க
நான் எழுப்பிய சப்தம்...

ஒரு ருபாய் தர்மம் பண்ண இத்தனை சோதனை.

தர்மம் செய்த பின்பும் சோதனை சரியாக செய்தேனா
என்று மனதில் நெருடல்...

"ஐயா, அம்மா" - என் ஈன மனது நொண்டிதான் கிடக்கிறது
"ஏதாவது தர்மம் பண்ணுங்க"னு பிச்சை 
எடுக்கவேண்டியவன் நான் இல்லயோ?