வெள்ளி, 29 நவம்பர், 2024

தேங்க்ஸ் கிவ்விங்




நான் சைவமாக மாறியதற்கு 

நன்றி நவின்றது...

வான் கோழி

திங்கள், 4 மார்ச், 2024

சும்மா இரு

 



கடவுள் இருக்கும் இடத்திற்கு 

பூ 

எடுத்துச் சென்றான் 

பக்தன்... 

பூ 

இருக்கும் இடத்திலேயே 

கடவுள் இருப்பதை அறிந்த 

ஞானி... 

சும்மா இருந்தான் 


அமரர் ஊர்தியும் சர வெடியும்




மார்ச் மாதம்...

போக்குவரத்து நெரிசல்,    

மார்ச்சுவரி செல்லும் 

அமரர் ஊர்தி...

சர வெடிப் பட்டாசு, 

சத்தம் அடங்கியதும் 

புகையுடன் ஒரு வாசம், 

ஏனோ எனக்கு மட்டும் 

அது மகிழ்ச்சியாய் 

தீபாவளியை 

நினைவு படுத்தியதில் 

ஒரு கணம் இன்பம்...

மறு கணம் நெருடல்...

"சரி சரி 

அந்த ஆன்மா சாந்தி அடையட்டும்",  என்று 

அவசரமாய் நினைத்து விட்டு 

நகர்ந்தேன்.


திங்கள், 18 டிசம்பர், 2023

பூ வாசம்

 


காசு குடுக்காமலே

பூக்கடையில் கிடைக்கிறது

பூ வாசம்!



வியாழன், 7 டிசம்பர், 2023

பிரதிபலிப்பு

 



மழை நீர் தேக்கம் ...

விடியலில் புதியதாய் 

பிரதிபலித்தது அதிலே  

உதய சூரியன்



திங்கள், 11 ஜூலை, 2022

சங்கமம்

 



    

இருபத்தைந்தாண்டு கால நினைவை

வெறும் இருபத்தைந்து மணி நேரத்திலே

அனுபவமாய் அள்ளி வழங்கிய அதிசயம்

இந்த சங்கமம்!

 

பலரை இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தே

சந்தித்தாலும்,

ஏதோ முந்தினம் பார்த்தது போல்

மட்டுமே இல்லாமல்,

தினம் தினம் பார்த்திருந்தது

போல் ஒரு உள் உணர்வை தந்தது

இந்த சங்கமம்!

 

வெளியுலக வாழ்க்கைக்கென

எப்பொழுதுமே போர்த்தியிருந்த

கனமான மனப் போர்வையை

தகர்த்தெரிந்து இயல்பாய்

இருந்த தருணங்களே

இந்த சங்கமம்!

 

'டேய் மாப்பிள...

ரொம்ப குண்டாயிட்ட, ஒல்லி ஆயிட்ட, அப்படியே இருக்க...'

என்ற பரிமாற்றத்திலும் கூட உடலை கடந்து

உள்ளங்கள் நலம் விசாரித்துக்கொண்டதே

இந்த சங்கமம்!

 

நட்புகள் அளித்த புத்துணர்ச்சியில்

அழகு சேர்க்க

பசுமையான புல் வெளி,

கண்களுக்கு இதமான வயல் வெளி,

வரப்பு வழி நிதான பயணம்,

பம்பு செட் குளியல்,

ஆலம் விழுது ஊஞ்சல்,

மண்ணை ஊதி உண்ட நாவல் பழம்,

சலனமில்லா ஏரி

சத்தமில்லா காற்று!

 

இரவு முழுவதும் தூங்காமல் கூட

மறுநாள் புத்துணர்வோடு இருந்த

அதிசயம்!

 

நினைவுகள் தான் பெரிய பரிசு

நினைவுகளை நினைவு படுத்தும் விதமாக

அனைவரது வரவேற்பு அறையை இந்நேரம்

அலங்கரித்திருக்கும்

பளிங்கு படிக கோபுரமும் ,

பித்தளை யானைகளும்...

 

கண்ணாடி முன் நின்று முகம் பார்த்தால்

நான் மட்டுமே தெரிகிறேன்...

அந்த குளம்பி குவளையில் பதித்த என்

முகத்தை பார்க்கும் பொழுது மட்டும்

நம் அனைவருமே தெரிகிறோமே!

 

நட்டு வைத்த விதைக்கு

நீர் ஊற்றும் பொழுதும்

நட்பே தெரிகிறது!

 

மீண்டும் சந்திப்போம் என்று

விடை பெற்றுக்கொண்டு

இரண்டு மணி நேரம் கடந்த பின்பும்

அந்த இடத்திலேயே

சுற்றிக்கொண்டிருந்தோம்!

 

சங்கமித்தவர்கள் பிரிந்து அவரவர்

வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தாலும்

சங்கமத்திலிருந்து ஒருவருக்கொருவர்

பகிர்ந்ததை எடுத்துக்கொண்டே செல்கிறோம்!

அதுவே நம்மை அடுத்த சங்கமம் வரை

உற்சாகமாய் பயணிக்க வைக்கும்!

 

நட்பில் நன்றி நவில்தல் இல்லை

நில்லாமல் ஓடி

பல தடைகளை தாண்டி கடலில்

சங்கமிக்கும் ஆறுகளாய்

அயராது உழைத்து

அனைவரையும் அழைத்து

சங்கமிக்கவைத்த அனைவருக்கும்

உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகள்!

 


ஞாயிறு, 20 ஜூன், 2021

தந்தையர் தினம்

 


மறைந்த என் தந்தையின் 

நினைவாகவே இருந்தேன் ...

என் குழந்தைகள் வந்து 

'அப்பா' என்றென்னை 

அழைக்கும் வரை.